விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்முரம்


விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 5 Sept 2021 10:02 PM IST (Updated: 5 Sept 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம், 

இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்கள், கோவில்களில் 5 அடி உயரம் முதல் 15 அடி உயரம் வரையுள்ள பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும்.
பின்னர் விநாயகர் சதுர்த்தி முடிந்து 3, 5, 7- வது நாட்களில் அந்த சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

சிறிய சிலைகளுக்கு வர்ணம்

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர்  சிலைகளை வைத்து கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது. 
இதனால் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முற்றிலும் முடங்கியுள்ளது. ஏற்கனவே தயாரித்த சிலைகளை விற்பனை செய்ய முடியாமல் கைவினை தொழிலாளர்கள், அவரவர் இடங்களிலேயே (குடோன்களில்) பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனிடையே விழுப்புரம் அருகே  அய்யங்கோவில்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி முதல் 2 அடி உயரமுள்ள சிறு, சிறு விநாயகர் சிலைகளை தயாரித்து அதற்கு வர்ணம் தீட்டும் பணியில்  தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கெடுபிடி செய்யக்கூடாது

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஏற்கனவே கொரோனா எங்களுடைய வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டுள்ள நிலையில் தற்போது வயிற்றுப்பிழைப்புக்காக சிறு, சிறு விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம். நாங்கள் முக கவசம் அணிந்தபடியும், சமூக இடைவெளியை பின்பற்றியே விநாயகர் சிலைகளை விற்பனை செய்வோம். எனவே எங்களுக்கு போலீசார் எந்தவித கெடுபிடியும் செய்யக்கூடாது என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story