வ.உ.சி. பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்-கனிமொழி எம்.பி. பேட்டி


வ.உ.சி. பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்ல வேண்டும்-கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 5 Sept 2021 10:43 PM IST (Updated: 5 Sept 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

வ.உ.சி. பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

ஓட்டப்பிடாரம்:
வ.உ.சி. பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

கனிமொழி எம்.பி. மாலை அணிவிப்பு

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு சார்பில் ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் மற்றும் அவரது இல்லத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
தொடர்ந்து வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு கூறும் வகையில் மாவட்ட செய்தித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். 

பேட்டி

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கப்பலோட்டிய தமிழன் 100-வது பிறந்தநாளை கருணாநிதி சிறப்பாக கொண்டாடினார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது உருவச்சிலையை திறந்து வைத்து வ.உ.சி.க்கு பெருமை சேர்த்தார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி. 150-வது பிறந்தநாளை தூத்துக்குடி மக்களே வியக்கக்கூடிய, பாராட்டக்கூடிய அளவிற்கு, யாரும் எதிர்பாராத அளவிற்கு 14 அறிவிப்புகள் வெளியிட்டு, அவருக்கு பெருமை சேர்த்து உள்ளார். 

வ.உ.சி.யின் பெருமைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த கடமையை உணர்ந்து மாணவர்களுக்காக அவரது வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டு அது மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும். அவருடைய புத்தகங்கள் பாடநூல் மூலமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கப்படும். 
வ.உ.சி. தன் வாழ்நாளை இந்திய சுதந்திரத்திற்காக மட்டுமல்லாமல், தமிழ் மொழிக்காக தமிழ் அடையாளங்களுக்காக சுயமரியாதை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடியவர். 
இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

வ.உ.சி சாலை

பின்னர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு டபிள்யூ.ஜி.சி. ரோட்டுக்கு வ.உ.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அந்த சாலை நேற்று வ.உ.சி. சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த பெயர் பலகை திறப்பு விழா டபிள்யூ.ஜி.சி ரோட்டில் நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உரிமை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வ.உ.சி. 150-வது பிறந்தநாளை முன்னிட்டு டபிள்யூ.ஜி.சி ரோடு, வ.உ.சி சாலை என்று மாற்றப்படும் என அறிவித்தார். அவரது புகழை, பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு வ.உ.சிதம்பரனார் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். வ.உ.சி.க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக தேச துரோக குற்றத்துக்காக சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பெரிய போராட்டத்துக்கு பிறகு 4 ஆண்டுகளுக்குள் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

வக்கீலாக பணியாற்றியபோது வழக்குக்கு வரும் நபர்களை தன் வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு அளித்து வழக்கை வென்று கொடுப்பார். கப்பல் கம்பெனி லாபம் ஈட்டவில்லை. சிறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்தபோது அவருடைய பொருளாதாரம் மிக நெருக்கடிக்கு தள்ளப்பட்ட அந்த நேரத்திலும் அவர் தொடர்ந்து இந்த மண்ணின் விடுதலைக்காக, தமிழுக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய தலைவராக இருந்தார்.

சுய மரியாதை

தேச விடுதலைக்காக குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் சுய மரியாதைக்காகவும், சமூக மாற்றம், பெண் விடுதலைக்காகவும் அவர் தொடர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய தலைவராக இருந்துள்ளார்.
இந்த சமூகத்தில் இருக்ககூடிய பெண்கள் கல்வி பெற வேண்டும். அனைத்து மனிதர்களுக்கும் கேள்வி கேட்கக்கூடிய உரிமை இருக்கிறது என்பதனை தான் வாழ்ந்த காலத்தில் தைரியமாக எடுத்து சொன்ன தலைவர் வ.உ.சி. ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட முத்துநகர் கடற்கரை நேருஜி பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் இடம், கைப்பந்து, கூடைப்பந்து விளையாடும் இடம், விளையாட்டு சாதனங்கள் மற்றும் ரூ.1.54 லட்சம் மதிப்பீட்டில் நவீன நிழற்குடை ஆகியவற்றை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகர மருத்துவ அலுவலர் வித்யா, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், யூனியன் தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், பஞ்சாயத்து தலைவர்கள் இளையராஜா, முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், ஓட்டப்பிடாரம் தாசில்தார் முத்து, மண்டல துணை தாசில்தார் ஆனந்த், யூனியன் ஆணையாளர் இப்ராகிம் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story