நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது; அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்


நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது; அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 5 Sep 2021 6:19 PM GMT (Updated: 5 Sep 2021 6:19 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று வழங்கினார்.

நாமக்கல்:
நல்லாசிரியர் விருது
நாமக்கல் மாவட்டத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் செல்லத்துரை, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் குமரேசன், அணியாபுரம் என்.எஸ்.ஏ.யூ. அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மாதேஸ்வரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருவருள் செல்வன், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நாராயணமூர்த்தி, காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை லதா, கொல்லிமலை சோலுடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம், ஒருவந்தூர்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி, மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாத்துரை, காளிப்பட்டி மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆனந்த் ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் 10 பேருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி கல்வித்துறையின் சார்பில் 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது, வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
ஆசிரியர் தினம்
விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
டாக்டர் ராதாகிருஷ்ணன் தன் வாழ்நாள் முழுவதையும் ஆசிரியர் பணிக்கே அர்ப்பணித்தவர். அவருடைய மாணவர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்தபோது, என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதை விட, என்னை உருவாக்கிய ஆசிரியர்களை கொண்டாடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில் மாணவர்களுக்கு ஏணி போல் இருந்து உயர்ந்த இடத்தினை அடைய செய்யும் ஆசிரியர் பெருமக்களை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் எனக்கு ஆரம்ப கல்வி முதல் மருத்துவ கல்வி வரை சிறப்பாக கற்று கொடுத்து, கல்வியில் மட்டுமின்றி இதர செயல்களிலும் என்னை சிறப்பாக வழிநடத்தி இத்தகைய உயர் நிலையினை அடைய செய்த எனது ஆசிரியர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டா, கொரோனா தொற்றால் சீராப்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் ஹேமலதா உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் கோகுல்நாத்திடம் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலை, 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை மற்றும் ஒரு பயனாளிக்கு பட்டா மாறுதல் பெறுவதற்கு ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்ரமணியம், ரவி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story