வனப்பகுதியில் அத்துமீறி வாகன சவாரி செய்த 4 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
மசினகுடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி வாகன சவாரி செய்த 4 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களை அழைத்து சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்
மசினகுடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி வாகன சவாரி செய்த 4 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களை அழைத்து சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜீப்பில் சவாரி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. அவர்கள் விடுதிகளில் தங்கி செல்வது வழக்கம். அப்போது வனப்பகுதியை சுற்றி பார்க்க அங்கிருந்து ஜீப்பில் சவாரி செய்கின்றனர். இதற்காக வாடகை அடிப்படையில் தனியார் மூலம் ஜீப்புகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மசினகுடி வனச்சரகர் மாரியப்பன், சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவில் சிங்காரா வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது ஆச்சக்கரை வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி சுற்றுலா பயணிகளை ஜீப்பில் சவாரிக்கு அழைத்து செல்லப்படுவது தெரியவந்தது.
2 பேர் கைது
உடனே அந்த ஜீப்பை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து ஜீப் டிரைவர் அர்ஜூனிடம்(வயது 21) விசாரணை நடத்தினர். இதில் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் தடையை மீறுி சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அர்ஜூன், ஜீப் உரிமையாளர் யாக்கோபு சலாம்(35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சவாரிக்கு அழைத்து செல்லப்பட்ட கோவையை சேர்ந்த சுதீஷ்(23), மனோஜ்(23), பேச்சியப்பன்(23), ஸ்ரீசுபாஷ்(21) ஆகிய 4 சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கொரோனா பரவலால் கடந்த 5 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.
இதை பயன்படுத்தி சிலர் பாதுகாக்கப்பட்ட வனத்துக்குள் தடையை மீறி சுற்றுலா பயணிகளை சவாரிக்காக வாகனங்களில் அழைத்து செல்கின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். எனவே சுற்றுலா பயணிகள் வனத்துக்குள் அத்துமீறி நுழைய கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story