மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூர் அருகே, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கட்டிடத்தை இடிக்கும் பணி
திருவாரூர் மாவட்டம் கொட்டாரக்குடி கீழ தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் பழமையாது என்பதால் இதை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு பதிலாக கொட்டாரக்குடி மேலத்தெருவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. மணிகன்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (46 வயது) தலைமையில் அணக்குடி பகுதியைச் சேர்ந்த அய்யாப்பிள்ளை (54), சபரிநாதன் (34), சாரதி (34) ஆகிய 4 தொழிலாளர்கள் கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
தொழிலாளி சாவு
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கட்டிட சுவர்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் 4 கூலி தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். இவர்கள் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
பின்னர் அவர்கள், இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.
3 பேர் படுகாயம்
மேலும் காயம் அடைந்த அய்யாப்பிள்ளை, சபரிநாதன், சாரதி ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மோகனுக்கு மனைவி மற்றும் 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story