கரூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்


கரூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 6 Sept 2021 12:26 AM IST (Updated: 6 Sept 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

கரூர்,
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் முழு முதல் கடவுளாக விளங்கும் விநாயகரை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது விநாயகரின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதும் பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்த சென்று நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.
பொது இடங்களில் தடை
இந்தநிலையில் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும், மத்திய-மாநில அரசுகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட ½ அடி முதல் 1 அடி வரை உள்ள விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து கரூர் தாலுகா அலுவலகம் அருகே விநாயகர் சிலைகளை வைத்து விற்பனை செய்து வரும் வியாபாரிகள் கூறியதாவது:-
விற்பனை மந்தம்
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை உள்ளதால் பெரிய அளவிலான சிலைகள் விற்பனை செய்யப்படவில்லை. இருப்பினும் வீட்டில் வைத்து வழிபடும் வகையில் ½ அடி முதல் 1 அடி வரை உள்ள சிலைகள் ரூ.40 முதல் 650 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் தற்போது விற்பனை மந்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.

Next Story