குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தா.பழூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர்
சாலை மறியல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருகையூர் ஊராட்சி காலனி தெருவில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இந்நிலையில் நேற்றும் குடிநீர் வரவில்லை எனத்தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அக்கிராம மக்கள் காலிக்குடங்களுடன் இருகையூர் பிரிவு சாலை அருகே தா.பழூர்- விளாங்குடி சாலையின் குறுக்கே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பழுது ஏற்பட்டு உள்ளதாகவும், அதை சீரமைத்து உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் தா.பழூர்- விளாங்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story