வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தல்
வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தினார்.
நெல்லை:
நெல்லையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
வருகின்ற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருப்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்:-
ஊர்வலத்திற்கு தடை
தற்போது கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு எந்த ஒரு ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை தனிப்பட்ட முறையில் அவரவர்கள் தங்களது வீட்டிற்குள் நடத்திக் கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி, போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெபராஜ் (நெல்லை ஊரக உட்கோட்டம்), பாலகிருஷ்ணன் (நாங்குநேரி), பிரான்சிஸ் (அம்பை), பார்த்திபன் (சேரன்மாதேவி) மற்றும் தாழையூத்து, அம்பை, விக்கிரம சிங்கபுரம், வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு போன்ற இடங்களைச் சேர்ந்த அனைத்து இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story