விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்


விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Sept 2021 2:18 AM IST (Updated: 6 Sept 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:

கல்வி உதவித்தொகை

  விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்-மந்தரி பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற நாளில் அறிவித்தார். அதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் இந்த விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  விவசாய விளைபொருட்களை அறிவியல் பூர்வமான முறையில் கொண்டு செல்லுதல், அவற்றை சேமித்து வைத்தல், சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பல்கலைக்கழகங்களில் புதிதாக கண்டுபிடிக்கும் விதைகளை விவசாயிகளின் நிலங்களில் பயன்படுத்த வேண்டும்.

கிசான் சம்மான் திட்டம்

  விவசாயிகள் வியர்வில் இறைவன் உள்ளார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார். இது மிக கடினமான சவால். இந்த சவாலை பிரதமர் ஏற்று அதற்கான வழிகளை ஆலோசித்து வருகிறார். விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிசான் சம்மான் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. அத்துடன் கர்நாடக அரசு ரூ.4 ஆயிரம் வழங்குகிறது. ஆகமொத்தம் கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில், எடியூரப்பாவின் வழிகாட்டுதலில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்வேன்.

17 லட்சம் மாணவர்கள்

  விவசாயிகள் தங்களின் குழந்தைகளை மேல் படிப்பை படிக்க வைக்க வேண்டும் நோக்கத்தில் கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும் விவசாயிகளின் குழந்தைகள், மேல் படிப்பு படிக்க இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  விழாவில் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் பேசியதாவது:-
  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளை மேம்படுத்தவும், விவசாய குழுக்களை அமைக்கவும் ரூ.6,850 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விளைபொருட்கள் வீணாகிறது. அதனால் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1½ லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முன்னேறி வரும் மாநிலம். இங்கு அமல்படுத்தப்படும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றன.
  இவ்வாறு நரேந்திரசிங் தோமர் பேசினார்.

  விழாவில் விவசாயத்துணை இணை மந்திரி ஷோபா, கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான், தோட்டக்கலை மந்திரி முனிரத்னா, பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story