பெங்களூருவில் ரூ.1 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் - நைஜீரிய வாலிபர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
டூத் பேஸ்ட்டில் போதைப்பொருள்
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கம்மனஹள்ளி, சென்ட் தாமஸ் டவுன், 3-வது கிராசில் உள்ள வசிக்கும் வெளிநாட்டு வாலிபர் தனது வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். முதலில் அங்கு போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் சந்தேகத்தின் பேரில் டூத் பேஸ்ட், அழகு சாதன கிரீம் மற்றும் சமையல் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த டப்பாக்களில் போலீசார் சோதனை நடத்தினாா்கள். அப்போது அதற்குள் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவர்களுக்கு விற்பனை
இதையடுத்து, அங்கு வசித்து வந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த வாலிபர் என்று தெரிந்தது. அவர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்திருந்தார். பின்னர் பெங்களூருவுக்கு வந்த அவர், மும்பையில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து குறைந்த விலைக்கு போதைப்பொருட்களை வாங்கி, அவற்றை பெங்களூருவுக்கு கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். அதன்படி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த போது போலீசாாிடம் சிக்கி இருந்தார்.
அவரிடம் இருந்து 500 கிராம் எம்.டி.எம்.ஏ, போதைப்பொருள், 400 கிராம் எம்.டி.எம்.ஏ. மற்றும் எக்ஸ்.டி.சி. வகையான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கைதான நைஜீரியா வாலிபர் மீது பானசாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story