சேலத்தில் 3-வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை- வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
சேலத்தில் நேற்று 3-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சேலம்:
சேலத்தில் நேற்று 3-வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கனமழை
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
ஏற்காட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மலைப்பாதையில் உள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டியது. சேலம் அருகே ஏரி, அணைகள் நிரம்பியதால் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பலத்த காற்றுடன்...
இந்தநிலையில் சேலம் மாநகரில் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்தது. மதியம் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்தில் பயங்கர இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், பெரமனூர், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, குகை, 5 ரோடு, சங்கர் நகர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, சத்திரம் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அன்னதானப்பட்டி, ரத்தினசாமிபுரம், தாதகாப்பட்டி அம்பேத்கர் நகர், பச்சப்பட்டி பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதாவது, வீடுகளை விட்டு வெளியே வராமல் அவதிப்பட்டனர்.
தமிழ்ச்சங்கம் ரோடு
சேலம் தமிழ்ச்சங்கம் ரோட்டில் போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலையில் வெள்ளம்போல் காட்சியளித்தது. இதேபோல், சங்கர் நகர் பகுதியில் அரசு மாணவிகள் விடுதிக்கு செல்லும் சாலையிலும் மழைநீர் அதிகளவில் தேங்கியது.
இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலத்தில் நேற்று பெய்த கனமழையால் அணைமேடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மக்கள் அவதி
இதேபோல் சேலம் ரத்தினசாமிபுரம் பகுதியில் கனமழையால் வீடுகள் மற்றும் அங்குள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். களரம்பட்டி, கிச்சிப்பாளையம், நாராயண நகர், அம்மாபேட்டை, பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தது.
இந்த பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சேலத்தில் தொடர்ந்து 3-வது நாளாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story