கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்துக்கு அனுமதி


கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 6 Sept 2021 2:48 AM IST (Updated: 6 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு:

கொரோனா வைரஸ்

  கர்நாடகத்தில் கடந்த ஆண்டு(2020) மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரல் பரவலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை பரவ தொடங்கியது. முதல் அலையைவிட 2-வது கொரோனா அலை கோரத்தாண்டவம் ஆடியது. ஏராளமானோரை காவு வாங்கியது. இதனால் மீண்டும் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் கொரோனா 2-வது அலை தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது.

  தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனாலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை, பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

விநாயகர் சதுர்த்தி

  இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கர்நாடகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிபுணர் குழுவினர் மற்றும் மந்திரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  இந்த கூட்டத்தில் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில், கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிபந்தனையுடன் வைக்கலாம். இந்த தகவலை வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பகிரங்கமாக அறிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு இடையூறு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் உள்ளது. அதனால் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட அனுமதி வழங்கலாமா? என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், கர்நாடகத்தில் பொது இடங்களில் சில நிபந்தனைகளுடன் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  சிலைகளை 5 நாட்கள் வரை வைத்து பூஜை செய்யலாம். ரசாயன கலப்புடன் கூடிய சிலைகளை வைக்க எக்காரணம் கொண்டும் அனுமதி இல்லை. நகரங்களில் வார்டுகளில் தலா ஒரு இடத்தில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். கிராமங்களில் சிலை வைப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உரிய உத்தரவு பிறப்பிப்பார்கள். அதிகபட்சமாக 50-க்கு 50 அடி என்ற வீதத்தில் பந்தல்களை அமைக்க வேண்டும். அங்கு எந்தவிதமான கலை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது. விழ கமிட்டியினர் கட்டாயம் தடுப்பூசி போட்டியிருக்க வேண்டும்.

  ஒருவேளை அவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால், அவர்களுக்காக அந்தந்த பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். சிலைகளை அருகில் உள்ள ஏரிகளில் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும். ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. வெகு சிலரே சிலையை எடுத்து வர வேண்டும். சிலைகளை கரைக்கும் இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

எல்லை மாவட்டங்களில்...

  கேரளா, மராட்டியம் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்படும். அதை விட பாதிப்பு அதிகமாக இருந்தால் பண்டிகை கொண்டாட அனுமதி வழங்க மாட்டோம். உள்ளூர் போலீசாரின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும்.

  இதுகுறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதல் வெளியிடப்படும். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா 3-வது அலை அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தொடங்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். இதனால் இந்த மாதம் மிக முக்கியமான காலக்கட்டம். அதன் காரணமாக கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்துள்ளோம்.

தனிமனித இடைவெளி

  இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரும் விதிமுறைகளை மீறக்கூடாது. அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை அதாவது முகக்கவசம் அணிவது, தனிமனி இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

  இதையடுத்து விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவது தொடர்பான கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதன் விவரம் வருமாறு:-

கொண்டாட வேண்டும்

  * விநாயகர் சதுர்த்தியை கோவில்களுக்கு உள்ளே, தங்களின் வீடுகளில் அல்லது அரசு-தனியார் பொது இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் கூடி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

  * பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலையின் உயரம் 4 அடிக்கு மிகாமலும், வீடுகளில் 2 அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

  * பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலை நிகழ்ச்சியில் அதிகபட்சம் 20 மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

கலை நிகழ்ச்சிகள்

  * விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அல்லது விழா குழுவினர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

  * பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் சிலைகளை வைக்க வேண்டும்.

  * விநாயகர் சிலை வைக்கப்படும் பகுதியில் எந்த விதமான கலை நிகழ்ச்சிகள், மனமகிழ் நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை.

  * விநாயகர் சிலையை நிறுவும்போதோ அல்லது கரைக்க எடுத்து செல்லும்போதோ எக்காரணம் கொண்டும் ஊர்லவம் நடத்த அனுமதி இல்லை.

நடமாடும் குளங்கள்

  * வீடுகளில் வைக்கப்படும் சிலைகளை அங்கேயே கரைக்க வேண்டும். பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை, அருகில் உள்ள ஏரிகள், குளங்கள் அல்லது நடமாடும் குளங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.

  * விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தில் தினமும் சானிடைசர் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதித்து அவர்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும்.

  * பக்தர்கள் தரிசனத்தின்போது கட்டாயம் 6 அடி இடைவெளி பின்பற்றப்படுவது, முகக்கவசம் அணிவதை விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
  இவ்வாறு அரசு நிபந்தனைகள் விதித்துள்ளன.

Next Story