விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை


விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை
x
தினத்தந்தி 6 Sept 2021 6:29 PM IST (Updated: 6 Sept 2021 6:29 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10 கோடியே 86 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது.

உடுமலை, செப்.7-
 அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10 கோடியே 86 லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது.
சர்க்கரை ஆலை
உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 
இந்த ஆலை அரவைக்குத் தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி ஆகிய தாலுகாக்களில் கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய இடங்களில் உள்ள கோட்டகரும்பு அலுவலகங்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்து கொள்முதல் செய்யப்பட்டு, அரவை செய்யப்பட்டுவருகிறது
கரும்பு அரவை
அதன்படி 2020 2021 ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி தொடங்கி ஜூலை மாதம் 1 ந் தேதி அதிகாலை நிறைவடைந்தது. இந்த அரவைப்பருவத்தில் மொத்தம் 63 ஆயிரத்து 560 டன் மற்றும் 276 கிலோ கரும்பு அரவை செய்யப்பட்டது. இதில் ஜூன் மாதம் கரும்பு அரவை அதிகமாக இருந்தது.
இந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பிற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்த கரும்பு கிரையத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.2707 பைசா 50 வீதம் மொத்தம் ரூ.17 கோடியே 20 லட்சத்து 89 ஆயிரம் வழங்கவேண்டும். இந்த ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்பு கிரையத்தொகை ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் மே மாதம்21ந் தேதிவரை கரும்புசப்ளை செய்த விவசாயிகளுக்கு கரும்புகிரையத் தொகையாக ஏற்கனவே ரூ.5 கோடியே 77 லட்சம் அந்தந்த விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் செலுத்திபட்டுவாடா செய்யப்பட்டு விட்டது.
கரும்பு நிலுவைத்தொகை
இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.அதனால் இந்தஆலையில் கடந்த மேமாதம் 22ம்தேதி முதல் ஜூலை மாதம் 1ந்தேதி அதிகாலை வரைகொள்முதல் செய்யப்பட்டகரும்பிற்கான கிரையத் தொகை ரூ.11 கோடியே 43 லட்சம் கரும்பு விவசாயிகளுக்குகு வழங்கப்படாமல் நிலுவையாக இருந்துவந்தது. இந்தநிலையில், இடையில், நிலுவைத் தொகையில் ரூ.57லட்சம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து736 விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய தொகை ரூ.10 கோடியே 86 லட்சம் வழங்கப்படாமல் நிலுவையாக இருந்து வந்தது. அதனால் விவசாயிகள், அடுத்ததாக விவசாயப் பணிகளுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அவர்கள் கரும்புக்கிரைய நிலுவைத் தொகைகிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஆலைநிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்குவதற்கான நிதி ஆலையில் இல்லாததால், ஆலைக்கு வழிவகைக்கடன் வழங்கும்படி அரசை ஆலைநிர்வாகம் தொடர்ந்து கேட்டுவந்தது. இந்த நிலையில் அரசு இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழிவகைக் கடனாக ரூ.10 கோடியே 86 லட்சம் வழங்கியுள்ளது. இந்த தொகை ஆலைக்கு கடந்த 4ந் தேதி வந்து சேர்ந்தது.
 பட்டுவாடா
இதைத்தொடர்ந்து 736 விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகை ரூ.10கோடியே 86 லட்சம் நேற்று அந்தந்த கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இதன்மூலம் 2020 2021-ம் ஆண்டு அரவைப்பருவத்தில் ஆலைக்கு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்பிற்கு அரசு நிர்ணயித்திருந்த கரும்பு கிரையத்தொகை நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.

Next Story