கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  சிறப்பாக பணிபுரிந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
x
தினத்தந்தி 6 Sep 2021 4:38 PM GMT (Updated: 6 Sep 2021 4:38 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கலெக்டர் ஸ்ரீதர் ரவிக்குமார் எம் பி ஆகியோர் வழங்கினர்


கள்ளக்குறிச்சி

விருது வழங்கும் விழா

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி சேவை புரிந்த 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோதிலிங்கம், சங்கராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன், திருநாவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ராஜசேகரன், தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் விஸ்வநாதன், வடதொரசலூர் அரசு உயர்நிலைப்பள்ளிஆசிரியர் அனந்தகண்ணன், சின்னமணியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக்ஜாகிர் உசேன், பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பாரதி, பரிகம் ஆதிதிராவிட நல ஆரம்பப்பள்ளி ஆசிரியர் அமுதன் ஆகிய 9 பேருக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினர்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் என 9 பேருக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னலமற்ற சேவையோடு பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீர் மேலாண்மை, சுற்றுப்புற மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். 

கொரோனா நிவாரணத்துக்கு 

இந்த விழாவில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது பெற்ற சின்ன மணியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் ஜாகீர்உசேன் விருதின் மூலம் பெற்ற ரூ.8 ஆயிரத்துக்கானகாசோலையினையும் சேர்த்து ரூ.10 ஆயிரம் கொரோனா நிவாரணநிதிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமொழி, ஆரோக்கியசாமி, பள்ளித் துணை ஆய்வாளர்கள் செந்தில்குமார், பிரபாகரன், சரவணன், ஏ.கே.டி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்டக்கல்வி அலுவலர் கார்த்திகா நன்றி கூறினார்.




Next Story