வீட்டுமனை பட்டாகேட்டு விருத்தாசலம் சப்-கலெக்டா் அலுவலகம் முற்றுகை
வீட்டுமனை பட்டாகேட்டு விருத்தாசலம் சப்-கலெக்டா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
விருந்தாசலம்,
விருத்தாசலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், நகை வேலை செய்யும் பத்தர்கள், சிலை வடிவமைப்பாளர்கள், கொல்லர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இதையடுத்து அவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை திட்டத்தின் கீழ் வீட்டு மனைகள் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று விஸ்வகர்மா பொற்கொல்லர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் சப்- கலெக்டர் அமித்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்கள், தங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் வேலைவாய்ப்பை இழந்து விட்டனர். வாடகை கூட கொடுக்க முடியாமல் குழந்தைகளுடன் சிரமமடைந்து வருகிறோம். எனவே தமிழக அரசின் மூலம் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரியகண்டியங்குப்பம், மணலூர், காணாது கண்டான், ரெயில்வே ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுவை சப்-கலெக்டர் அமித் குமாரிடம் வழங்கினர். அதனை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story