கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்


கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 Sept 2021 10:28 PM IST (Updated: 6 Sept 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுப்பதற்கு கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள குட்டத்துப்பட்டி, அன்னைநகர், பெரியார்நகர், புளியராஜக்காபட்டி, குஞ்சனம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, குஞ்சனம்பட்டியில் உள்ள விவசாய நிலத்தில் மதுபான கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. 


இங்கு மதுபான கடை அமைத்தால் அந்த வழியாக கோவிலுக்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள். இரவில் பெண்கள் அந்த வழியாக நடந்து செல்ல அச்சப்படுவார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும். மதுபான கடை அமைய உள்ள இடத்தை சுற்றிலும் 6 விவசாய கிணறுகள் உள்ளன. மதுபோதையில் தள்ளாடியபடி வருபவர்கள் அந்த கிணறுகளில் தவறி விழும் அபாயம் உள்ளது. 

எனவே விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை அமைக்காமல் வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் சிலர் மட்டும் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சிலர் மட்டும் சென்று கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story