இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்று மணல் திட்டில் தவித்த இளம்பெண்


இலங்கைக்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்று மணல் திட்டில் தவித்த இளம்பெண்
x
தினத்தந்தி 6 Sept 2021 11:43 PM IST (Updated: 6 Sept 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இளம்பெண்ணும், அந்த பெண்ணை படகில் அழைத்து சென்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு படகில் தப்பிச்செல்ல முயன்று நடுக்கடலில் உள்ள மணல்திட்டில் தவித்த இளம்பெண்ணும், அந்த பெண்ணை படகில் அழைத்து சென்ற 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மணல் திட்டில் இளம்பெண் தவிப்பு

ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி நடுக்கடல் பகுதியில் உள்ள 3-வது மணல் திட்டில் இளம்பெண் ஒருவர் தவித்து வருவதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து ஒரு மீன்பிடி படகில் கடலோர போலீசார் 3-வது மணல் திட்டு பகுதிக்கு நேற்று காலை விரைந்து சென்றனர். 3-வது மணல் திட்டில் தனியாக நின்று கொண்டு இருந்த அந்த பெண்ணை படகில் ஏற்றி ராமேசுவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேசுவரி மற்றும் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர்.

வீடு எடுத்து தங்கினார்

 விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கஸ்தூரி (வயது 20) என்பதும், இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் கடந்த 2018-ம் ஆண்டு தனது தாயாருடன் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கி இருந்துள்ளார். இவரை அழைத்து வந்த இவரது தாயார் விமானம் மூலம் மீண்டும் இலங்கை திரும்பி சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் கஸ்தூரி சென்னை வளசரவாக்கம், மதுரவயல், திருச்சி திருவெறும்பூர் உள்ளிட்ட இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி இருந்ததாகவும் தெரியவருகிறது. விசா காலம் முடிந்து விட்டதால் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். பின்னர் அவரது தாயாரிடம் போனில் பேசியபோது இலங்கையிலிருந்து திருட்டுத்தனமாக படகு ஒன்றை அனுப்புவதாகவும் அந்த படகில் ஏறி இங்கு வந்து விடுமாறும் கூறியதாக தெரிகிறது.
3 பேர் அழைத்துச் சென்றனர்
அதன் பேரில் சென்னையில் இருந்து பஸ்சில் நேற்று முன்தினம் அதிகாலை ராமேசுவரம் வந்து இறங்கிய கஸ்தூரி, கோவில் அருகே உள்ள விடுதி ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து 3 பேர், படகில் அவரை அழைத்துச் சென்றனர். அதிகாலை வரை அவர் படகில் காத்திருந்ததாகவும், அவரை ஏற்றிச்செல்ல இலங்கையிலிருந்து படகு ஏதும் வராததால் மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்டு அந்த 3 பேர் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்த எண்ணை வைத்து, அவரை இலங்கைக்கு அழைத்து செல்வதாக கூறி மீன்பிடி படகில் ஏற்றி மணல்திட்டு பகுதியில் இறக்கி விட்ட 3 பேரை பிடித்தனர். அவர்கள் தனுஷ்கோடி பாலம் பகுதியைச் சேர்ந்த முனியராஜ் (22), ஈசுவரன் (24), சிவிராஜ் (23) என்பது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கடலோர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படகில் ஏற்றிச் செல்வதற்காக அந்த பெண்ணிடம் இருந்து  பெற்ற ரூ.30 ஆயிரம் மற்றும் படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story