உயர்நீதிமன்ற வேலைக்குசிபாரிசு கேட்டு யாரும் வர வேண்டாம் அமைச்சர் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட நோட்டீஸ்
உயர்நீதிமன்ற வேலைக்குசிபாரிசு கேட்டு யாரும் வர வேண்டாம் என்று அமைச்சர் வீட்டு முன்பு நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் வீடு புதுக்கோட்டையில் கீழ 2-ம் வீதியில் அமைந்துள்ளது. இவரது வீட்டு முன்பு கணினியில் டைப் செய்யப்பட்ட வாசகத்தினை பிரிண்ட் எடுத்து நோட்டீஸ் போல ஒட்டப்பட்டுள்ளது. அதில் ``உயர்நீதிமன்ற வேலை குறித்து அமைச்சரை சந்திக்க யாரும் அணுக வேண்டாம். அப்பணி முழுமையாக உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது'' என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. அமைச்சர் வீட்டு முன்பு ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோர்ட்டுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த மாதம் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினர். இந்த நிலையில் கோர்ட்டு தொடர்பான பணியிடம் என்பதால் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் சிபாரிசுக்காக சிலர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டிற்கு நேரிலும், கட்சி பிரமுகர்களின் உதவியோடும் சிலர் வந்துள்ளனர். அதனால் அமைச்சர் ரகுபதி தன்னிடம் பரிந்துரை கேட்டு யாரும் வரவேண்டாம் என தெரிவிக்கும் வகையில், அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story