கொரோனா பரவலை தடுக்க விநாயகர் சதுர்த்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்-கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நாமக்கல்:
ஊர்வலத்துக்கு தடை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமய விழாக்களின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் விதிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு வருகிற 15-ந் தேதி வரை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ள சமய விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வழங்கி உள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லை
எனவே விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை. எனவே விழாவை பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று அருகிலுள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோவில்களின் வெளிப்புறத்திலோ அல்லது சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த சிலைகளை பின்னர் முறையாக அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த அனுமதி தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் அதனை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விழாவிற்கான பொருட்கள் வாங்க கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறாது முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ் மற்றும் தாசில்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story