பர்கூர் அருகே சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்: தாய், கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது-கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்


பர்கூர் அருகே சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்: தாய், கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது-கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 7 Sept 2021 12:16 AM IST (Updated: 7 Sept 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே 7 மாதங்களுக்கு முன்பு நடந்த சிறுவன் கொலையில் திடீர் திருப்பமாக அவனது தாய், கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

பர்கூர்:
சிறுவன் கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா காரகுப்பம் ஊராட்சி கொட்லேட்டி கிராமத்தில் இருந்து உச்சன்கொல்லைக்கு செல்லும் வழியில் மல்லேஸ்வரன் மலை அடிவாரத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். 
3 பேர் கைது
இந்த நிலையில் பெங்களூரு பி.டி.எம்.லேஅவுட் பகுதியில் குடியிருந்து வரும் தனலட்சுமி, தனது மகள் ஷோபாவுடன் பெங்களூரு மைக்கோ லே அவுட் போலீஸ் நிலையத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வந்தார். அங்கு தனலட்சுமி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது மற்றொரு மகள் நதியாவின் மகன் ராகுல் (10) என்பவனை கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணவில்லை என்று கூறியிருந்தார்.இதையடுத்து போலீசார் பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக பதிவான வழக்குகள், புகைப்படங்களை பார்த்தனர். இதில் திடீர் திருப்பமாக பர்கூரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் புகைப்படத்தை காண்பித்த போது அது பெங்களூருவை சேர்ந்த ராகுல் என உறுதி செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் ராகுலை அவனது தாய் நதியா, கள்ளக்காதலன் சுனில்குமார் (30), இவரது மற்றொரு கள்ளக்காதலி சிந்து (25) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர். கைதான சுனில்குமார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
கள்ளத்தொடர்பு
நான் பெங்களூருவில் வசித்து வருகிறேன். என் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நதியாவிற்கும், ரவிக்கும் திருமணம் ஆகி குழந்தை ராகுல் பிறந்தான். அவனுக்கு 3 மாதம் இருக்கும் போது ரவி, நதியாவை பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு எனக்கும், நதியாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
நாங்கள் அவ்வப்போது சந்தித்து உல்லாசமாக இருப்போம். ராகுல் குழந்தையாக இருக்கும் வரையில் பிரச்சினை இல்லாமல் நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். அவன் வளர, வளர எங்களுக்கு இடையூறாக இருந்தான். இதனால் நானும், நதியாவும் சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடிப்போம். சூடு வைப்போம்.
 கள்ளத்தொடர்பு 
இதற்கிடையே எனக்கும், அதேபகுதியில் வசித்து வரும் சிந்து என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நான் நதியாவுடனும், சிந்துவுடனும் உல்லாசமாக இருந்து வாழ்க்கை நடத்தி வந்தேன். எனக்கும், நதியாவிற்கும் இடையே இருந்த உல்லாச வாழ்க்கைக்கு சிறுவன் ராகுல் இடையூறாக இருந்தான். கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி நதியா காய்கறி வியாபாரம் செய்வதற்காக சென்று விட்டாள்.இதனால் சிறுவன் ராகுல் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது நான் அவனை அடித்த போது இறந்து விட்டான். இதையடுத்து நான் 2 இருக்கைகள் கொண்ட சிறிய ரக காரில் ராகுலின் உடலை பின்னால் வைத்தேன். பின்னர் நானும், எனது மற்றொரு கள்ளக்காதலி சிந்துவும் சிறுவன் உடலுடன் தமிழ்நாட்டிற்கு வந்தோம். இந்த வழியாக குப்பம் சென்று உடலை போட திட்டமிட்டோம்.
6 மாதமாக ஏமாற்றினோம் 
ஆனால் குருவிநாயனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே போலீஸ் சோதனைச் சாவடி இருந்ததால் அந்த முடிவை கைவிட்டு, பசவண்ண கோவில் வழியாக  சென்று மலை அடிவாரத்தில் உடலை போட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் வந்து விட்டோம். இந்த விவரத்தை பின்னர் நதியாவிடம் கூறினோம்.
சிறுவன் காணாமல் போனது முதல் அவனது பாட்டி தனலட்சுமி, பெரியம்மா ஷோபா ஆகியோர் சிறுவன் குறித்து அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தனர். 
அதற்கு நாங்கள் சிறுவன் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்கிறான் என்று கூறினோம். 6 மாதங்களுக்கும் மேலாக அவன் வராததாலும், பேசாததாலும் சந்தேகத்தில் அவனது பாட்டி போலீசில் புகார் செய்தார். அதில் நாங்கள் மாட்டிக் கொண்டோம். 
இவ்வாறு சுனில்குமார் கூறினார். 
இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பர்கூர் போலீசார் விசாரணை 
கொலை செய்யப்பட்ட சிறுவன் ராகுலின் உடல் பர்கூரில் கிடந்ததால் வழக்கை பர்கூருக்கு மாற்ற பெங்களூரு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் பெங்களூரு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Next Story