கீரமங்கலம் பகுதியில் மழை, காற்றில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


கீரமங்கலம் பகுதியில் மழை, காற்றில் சேதமடைந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Sept 2021 12:19 AM IST (Updated: 7 Sept 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. அதே போல கீரமங்கலம், செரியலூர், கறம்பக்காடு, கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம், சேந்தன்குடி, நகரம், பெரியாளூர், மேற்பனைக்காடு உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழையுடன் கடும் காற்றும் சேர்ந்து வீசியதால் செரியலூர், மேற்பனைக்காடு உள்பட பல கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் ஒடிந்து சாய்ந்தது. செரியலூர் கிராமத்தில் பல வாழை தோட்டங்களில் ஏராளமான வாழை மரங்கள் பிஞ்சு காய்களுடன் வேரோடு சாய்ந்தது. இதே போல மா, பலா, வேம்பு போன்ற மரங்களும் ஒடிந்தும், வேரோடு சாய்ந்தும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் புயல், வெயில், மழை, காற்று போன்ற இயற்கை சீற்றங்களால் சேதமடைந்து விவசாயிகளை நட்டமடைய வைக்கிறது. கஜா புயல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் அதன் பிறகு பல முறை சூறைக்காற்றில் விவசாயம் சேதமடைந்துள்ளது. தற்போது பிஞ்சும், பூவுமான ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து இழப்பு ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த முறையாவது வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story