திண்டுக்கல்லில் பிரபல கடைக்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து வாலிபர் ரகளை
திண்டுக்கல்லில் பிரபல கடைக்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர், தொழிலாளியை வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பிரபல கடைக்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபர், தொழிலாளியை வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை
திண்டுக்கல் நகரில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த சாலைகளில் பழனி சாலையும் ஒன்று. இந்த சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் கடை உள்ளது. அங்கு நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு வாலிபர் கையில் பட்டாக்கத்தியுடன் கடைக்கு வந்தார். மேலும் வாய்க்கு வந்தபடி வசைபாடிய வாலிபர், பட்டாக்கத்தியை சுழற்றியபடி கடைக்குள் நுழைந்தார். அதோடு கத்தியை காண்பித்து கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்களை மிரட்டியதோடு தகராறில் ஈடுபட்டார். இதனால் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களும், ஊழியர்களும் செய்வதறியாது திகைத்தனர்.
தொழிலாளிக்கு வெட்டு
அதன்பின்னர் கடைக்கு வெளியே வந்த வாலிபர், அங்கும் சாலையில் வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சென்ற அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரத்தினகுமார் (52) என்பவரை, வாலிபர் பட்டாக்கத்தியால் வெட்டினார். அதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்து ரத்தம் வழிந்தது. அதை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்களும் வெளியே ஓடினர். இதற்கிடையே வாலிபரின் அட்டகாசத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போலீசார் விசாரணை
அதற்குள் போலீசார் வருவதை அறிந்த அந்த வாலிபர், தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார். ஆனால் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story