பட்டியில் கட்டப்பட்ட 21 ஆடுகள் திருட்டு
பட்டியில் கட்டப்பட்ட 21 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பெரம்பலூர்:
பட்டியில் கட்டப்பட்ட ஆடுகள்
பெரம்பலூர் அருகே எளம்பலூர் புறவழிச்சாலையோரத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது 65). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என மொத்தம் 63 ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு, மாலையில் தனது வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து கட்டியுள்ளார்.
பின்னா் ஆடுகளுக்கு காவல் இருந்த செல்வராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் இரவில் மழை பெய்ததால் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இந்நிலையில் நேற்று காலை செல்வராஜ் எழுந்து வந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 63 ஆடுகளில், 21 ஆடுகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவலுக்கு ஆட்கள் இல்லாமல் இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி, ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் கால்நடை வளர்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story