இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தென்காசியில் 15 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
15 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி:
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, தென்காசியில் 15 கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டு செல்கின்றனர்.
தென்காசி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரம், சண்முகநல்லூர், ராமநாதபுரம், கோ.மருதப்பபுரம், சென்னிகுளம், குருக்கள்பட்டி, செவல்குளம், பாறைப்பட்டி மேல காலனி, அழகாபுரி, ராயகிரி, வடுகபட்டி, வெள்ளானை கோட்டை, தென்மலை, நாரணபுரம், சிவகிரி ஆகிய 15 கிராமங்களைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனு வழங்கி சென்றனர்.
தேசிய ஊரக வேலை
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் பஞ்சாயத்து வலங்கபுலி சமுத்திரம், பசும்பொன் நகர் பகுதி மக்கள் வழங்கிய மனுவில், ‘தங்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் முழுமையாக பணி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் வழங்கிய மனுவில், ‘13 ஆயிரத்து 500 மக்கள் நலப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
குவாரி
அச்சன்புதூர் நாம் தமிழர் கட்சி சார்பில் சுடலை தலைைமயில் வழங்கிய மனுவில், ‘கடையநல்லூர் தாலுகாவில் ஒருவருக்கு சொந்தமான குவாரியில் அதிகளவில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த குவாரி இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஆகும். எனவே இந்த குவாரியை மூட உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருவதால், ரெயில் நகரில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மனுக்கள் வழங்க வரும் பொதுமக்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை, நிழற்கூரை ேபான்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story