தொழிலாளியால் தாக்கப்பட்ட அண்ணன் திடீர் சாவு


தொழிலாளியால் தாக்கப்பட்ட அண்ணன் திடீர் சாவு
x
தினத்தந்தி 7 Sept 2021 2:34 AM IST (Updated: 7 Sept 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே தொழிலாளியால் தாக்கப்பட்ட அண்ணன் திடீரென இறந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள்சந்தை, 
இரணியல் அருகே தொழிலாளியால் தாக்கப்பட்ட அண்ணன் திடீரென இறந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தகராறு
குமரி மாவட்டம் இரணியல் கட்டிமாங்கோடு அருகே உள்ள கரிசல் விளை பகுதியை சேர்ந்தவர் செல்ல நாடார் (வயது 65). இவருடைய தம்பி சமுத்திர பாண்டியன் (45), தொழிலாளி. இவர்களுக்கிடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்றுமுன்தினம் இரவு செல்ல நாடார் மகன் ரமேஷ் (30), வீட்டு முன்பு நின்றபடி செல்போன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சமுத்திர பாண்டியன் வந்துள்ளார். அந்த சமயத்தில் ரமேஷ் மீது மோதுவது போல் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனை ரமேஷ் தட்டிக்கேட்டதால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த செல்ல நாடார் வெளியே ஓடி வந்தார். என்னுடைய மகனிடம் ஏன் தகராறு செய்கிறாய்? என சமுத்திரபாண்டியனிடம் கேட்டுள்ளார்.
அண்ணன் தாக்கப்பட்டார்
இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் வலுத்தது. அப்போது செல்ல நாடாரை, சமுத்திரபாண்டியன் கையால் தாக்கியதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவரை உறவினர்கள் மீட்டு வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.
அங்கு நாற்காலியில் அமர வைத்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
சாவு
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ரமேஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சமுத்திர பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சாதாரண தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story