கோவில் உண்டியலில் பணம் திருடிய தொழிலாளி கையும், களவுமாக சிக்கினார்
தீர்த்தஹள்ளி அருகே கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய தொழிலாளி கையும், களவுமாக சிக்கினார். அவர் உண்டியலில் கைவரிசையில் ஈடுபட்டதை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
சிவமொக்கா: தீர்த்தஹள்ளி அருகே கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய தொழிலாளி கையும், களவுமாக சிக்கினார். அவர் உண்டியலில் கைவரிசையில் ஈடுபட்டதை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
உண்டியலில் பணம் திருட்டு
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூர் அருகே மஹிசி அஸ்வத் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கோவிலுக்கு பக்தர் போல் ஒருவர் வந்தார்.
பின்னர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மற்ற பக்தர்கள் சென்றதும், அந்த நபர் நைசாக உண்டியல் அருகே சென்றார். பின்னர் அவர், மெல்லிய குச்சியை எடுத்து அதன் முனையில் சுவிங்கத்தை ஒட்டி, உண்டியல் உள்ளே விட்டு ரூபாய் நோட்டுகளை திருடியுள்ளார்.
கையும், களவுமாக சிக்கினார்
அந்த நபர், உண்டியலில் கைவரிசை காட்டும் காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இதனை கோவில் அலுவலக அறையில் இருந்த நிர்வாகிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகிகள் உடனடியாக அந்த நபரை கையும், களவுமாக பிடித்து மாளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் கோவில் உண்டியலில் பணத்தை நூதன முறையில் திருடிய நபரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், கைதானவர் பத்ராவதி தாலுகா பாரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளியான வசந்த்குமார் (வயது 36) என்பது தெரியவந்தது. அவர் மீது மாளூர் போலீசர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பக்தர்கள் அதிர்ச்சி
இந்த துணிகர சம்பவம் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story