ஜித்தின்ஜாய் உறவினர் உள்பட 2 பேரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜித்தின்ஜாய் உறவினர் உள்பட 2 பேரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜித்தின்ஜாய் உறவினர் உள்பட 2 பேரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது. இது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த போலீசாருக்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5 தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 சாட்சிகள்
அதன்படி நேற்று இந்த வழக்கில், 10-வது குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின்ஜாய் என்பவருடைய உறவினரும், அரசு தரப்பு சாட்சியுமான ஷாஜி மற்றும் மற்றொரு சாட்சியான அனீஸ் ஆகிய 2 பேரிடம் ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
அவர்களிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணை
கோடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், கூடலூர் வழியாக கேரளாவுக்கு காரில் தப்பி சென்றனர். முன்னதாக அவர்கள் சோதனைச்சாவடியை கடந்தபோது, முக்கிய நபர்கள் போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த காரை விடுவிக்கும்படி கூறியதாக தெரிகிறது.
இதனால் யார் தூண்டுதலின்பேரில் அந்த சிபாரிசு செய்யப்பட்டது, அதற்கான அவசியம் என்ன, நள்ளிரவில் வேறு யாரேனும் கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்களா ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சாட்சிகளிடம் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சம்மன் அனுப்ப திட்டம்
இந்த வழக்கில் 103 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். கோர்ட்டில் 41 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது போலீசார் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி ஆதாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை திரட்டி வருகின்றனர். மேலும் சதீசன், திபு உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story