நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சுகாதார பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை:
காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டுச்சென்றனர்.
களக்காடு நகர தெருவை சேர்ந்த மேகலா என்பவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மேகலா கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த அரசு ஊழியர்கள் மற்றும் நிலத்தை வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமங்களில் சுகாதார பணிகளை செய்து வரும் ஆசா பணியாளர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள கீழ தோணித்துறையை சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி, மகன், மகளுடன் ெகாடுத்த மனுவில், 'கடந்த மே மாதம் எனது உறவினர் ஒருவர் கொரோனாவால் இறந்து விட்டார். அப்போது அவர் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க சென்ற நான் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தால் பிழைத்து இருப்பார் என்று கூறினேன். உடனே அவருடைய மகன்கள் என்னை அடித்து விரட்டினார்கள். தற்போது என்னை கொலை செய்வதாக மிரட்டி வருகிறார்கள். எனவே எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதநேய ஜனநாயக கட்சி
மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம்தீன் தலைமையில் மனு கொடுத்தனர். அதில.் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மாவட்டம் முழுவதும் மந்தமாக நடைபெற்று வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் மோசமாக உள்ளது. நெல்லை டவுன் மவுண்ட்ரோடு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. எனவே உடனே இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படக்கூடிய கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன், தனது கடையை உடைத்து பொருட்களை திருடிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனு கொடுத்தார்.
சாலை வசதி
நெல்லை ரெட்டியார்பட்டி குறிஞ்சிநகர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் தலைவர் புண்ணியராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், ரெட்டியார்பட்டி குறிஞ்சி நகர் பகுதிக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை சுத்தமல்லி நரசிங்கநல்லூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, தனது கணவர் அரசு ஊழியராக வேலை பார்ப்பதாக கூறி தன்னை திருமணம் செய்து கொண்டு பணம் வாங்கி விட்டார். தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனு கொடுத்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் தலைமையில் கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பில் விரைவாக வீடு வழங்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story