திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: அஞ்சல் அலுவலக ஊழியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை


திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: அஞ்சல் அலுவலக ஊழியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 7 Sept 2021 11:21 AM IST (Updated: 7 Sept 2021 11:21 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் அஞ்சல் அலுவலக ஊழியர் வீட்டில் 26 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சந்தானராஜ் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). இவர் மீஞ்சூரில் பேக்கரி கடைவைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (42). இவர் சென்னை, அயனாவரத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அழகர்சாமி தனது 2-வது மகளை அழைத்துக்கொண்டு மீஞ்சூரில் உள்ள தனது சகோதரர் வீட்டில் விட்டு விட்டு பிறகு தான் நடத்தி வரும் பேக்கரிக்கு சென்றுவிட்டார்.

வழக்கம்போல் பாக்கியலட்சுமி தனது அஞ்சல் அலுவலகத்திற்கும், மூத்த மகள் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர்.

நகை கொள்ளை

இதனையடுத்து மாலையில் பாக்கியலட்சுமி திரும்பி வந்துபார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் தங்க நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கணவர் அழகர்சாமிக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அழகர்சாமி விரைந்து வந்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story