உரம் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் கனிமொழி எம்.பி. பேட்டி


உரம் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2021 6:20 PM IST (Updated: 7 Sept 2021 6:20 PM IST)
t-max-icont-min-icon

உரம் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

எட்டயபுரம்:
உரம் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
பயி்ற்சி முகாம்
விளாத்திகுளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மற்றும் உடைமைகளை பறித்துக் கொள்ளும் பிரச்சினை குறித்து நிச்சயமாக மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவோம். மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதற்குத்தான் திராவிட முன்னேற்ற கழகமும், முதல்வரும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். 
உரம் தட்டுப்பாடு
செயற்கை முறையில் உரம் தட்டுப்பாடு உருவாக்கக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென தனியாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, அனுப்பப்படக்கூடிய உரம் எங்கிருந்து எங்கு செல்கிறது? என்பதை கண்காணிப்பதற்கு மிகத்தெளிவான ஒரு திட்டம் உள்ளது. ஆனால் அதையும் தாண்டி சில நேரங்களில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. உலக அளவில் உரம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலையும் உயர்வாக உள்ளது என்பதால் உரம் தட்டுப்பாடு இருக்கின்றது என்பது உண்மைதான்.
இப்பிரச்சினையை சரி செய்ய என்னுடைய குழுவின் வழியாகவும், மேலும் தமிழக முதல்வரும் மத்திய அரசிடம் எடுத்துக் கூறி இருக்கிறார். உரம் தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிர் விதைகள் அறிமுகம்
முன்னதாக விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் பயிர் உற்பத்தியார்கள் சார்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பாதுகாப்பான மற்றும் முறையான பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். பயிர் உற்பத்தியாளர்கள் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் உரங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் டெல்லி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் சஷாங் சதுர்வேதி, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சரவணன், வேளாண்மை துறை அதிகாரிகள், பயிர் உற்பத்தியாளர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story