ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல்:
தொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா ரெட்டியபட்டி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் கருப்பணன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரி மலை பகுதியில் தங்கியிருந்து வேலை செய்தார். அப்போது 14.8.2014 அன்று சைக்கிளில் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வரும் போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், சைக்கிள் மீது மோதியது. இதில் கருப்பணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய மனைவி பாக்கியம், மகள் முத்துலட்சுமி, மகன் ரஞ்சித் ஆகியோர் இழப்பீடு கேட்டு திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு பஸ் ஜப்தி
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கருப்பணனின் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சத்து 16 ஆயிரத்து 992 இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட்டார்.
ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. அது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை மண்டலத்துக்கு உரிய அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் கோர்ட்டு அமீனா, வக்கீல் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.
Related Tags :
Next Story