178 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 178 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 178 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்க சமூக இடைவெளி இல்லாமல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாதந்தோறும் முதல் செவ்வாய்கிழமையன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். கொரோனா வைரஸ் 2-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் சிறப்பு முகாம் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பின்னர் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முகாமுக்கு தலைமை தாங்கினார். இயன்முறை பயிற்சியாளர் பார்த்தசாரதி, பேச்சு பயிற்சியாளர் காயத்ரி, தொழில்நுட்ப வல்லுனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
178 பேருக்கு அடையாள அட்டை
இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களை கண், காது, எலும்பு, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த டாக்டர்கள் முத்து, குமரேசன், கீர்த்தரசன், சதீஷ், ரேகா, மீனா, சிவாஜிராவ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். முகாமில் தகுதியுடைய 178 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. 261 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
சிறப்பு முகாம் 6 மாதங்களுக்கு பின்னர் நடைபெற்றதால் காலை 8 மணி முதல் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். அவர்கள் வரிசைப்படி முகாம் நடைபெற்ற அரங்கில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.
சமூக இடைவெளி இன்றி...
ஆனால் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அரங்கின் வெளியே நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றனர். பலர் வரிசையில் நிற்க முடியாமல் அவதி அடைந்தனர். அவர்களை அமர வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சிலர் போலீசாரின் பாதுகாப்பை மீறி முகாம் நடக்கும் அரங்கிற்குள் செல்ல முயன்றனர். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து போலீசார் மனுக்களை பெற்ற போது அனைவரும் மனுக்களை கொடுக்க முண்டியடித்தனர். அதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை பின்பற்றி அனைவரையும் பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கும்படியும், வரிசையில் நிற்கும் அனைவரிடமும் மனுக்களை வாங்கி அனுப்பும்படியும், பின்னர் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கும்படியும் கூறினார். மேலும் வரிசையில் நின்றவர்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் பங்கேற்க 500-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளி இன்றி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிக்கிய குழந்தைகள், முதியவர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் பங்கேற்க வந்த முதியவர்கள், குழந்தைகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். வெகுநேரமாக நின்றதால் முதியவர்கள் பலர் சோர்வடைந்தனர். முகாமில் பங்கேற்கும் நபர்களின் மனுக்களை போலீசார் வரிசைப்படி வாங்கினர்.
அப்போது பலர் மனுக்களை கொடுக்க வரிசை முறையை பின்பற்றவில்லை. அதனால் பெற்றோருடன் வரிசையில் நின்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட்டநெரிசலில் சிக்கி அவதி அடைந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ஆசுவாசப்படுத்தி வேறு இடத்தில் அமரவைத்தனர்.
6 மாதங்களுக்கு பின்னர் நடந்த சிறப்பு முகாமிற்கு போதிய வசதி மற்றும் முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டினர்.
=====
Related Tags :
Next Story