நெல்லிக்குப்பம் அருகே அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா
நெல்லிக்குப்பம் அருகே அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நெல்லிக்குப்பம்,
9-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவர். அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை பள்ளிக்கு சென்று வந்த மாணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவருக்கு கடந்த 4-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவர் பரிசோதனை முடிவுக்காக தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பரிசோதனை முடிவு வௌியானதில், அந்த மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த மாணவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
வகுப்பறை மூடல்
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் வட்டார மருத்துவ அலுவலர் பிரபு தலைமையில் சுகாதார அலுவலர் ரமேஷ் மற்றும் சுகாதார பணியாளர்கள், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சுத்தம் செய்தனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவா் அமர்ந்திருந்த வகுப்பறை உடனடியாக மூடப்பட்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மற்றும் அவருடன் வகுப்பறையில் அமர்ந்திருந்த 14 மாணவர்களையும் கொரொனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
இதுவரை கடலூர் மாவட்டத்தில் 4 ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அரசு பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story