ராமநாதபுரம்,
சத்திரக்குடி சமத்துவபுரம் வெற்றிநகரை சேர்ந்தவர் நாச்சியப்பன் மகன் முத்தையா (வயது27). இவர் தனது மனைவியை பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். குழந்தை பிறந்துள்ளதால் மனைவிக்கு துணையாக ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பிரசவ வார்டு அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அவரின் சட்டை பையில் இருந்த செல்போனை அருகில் படுத்திருந்தவர் நைசாக எடுப்பதை கண்டு சுதாரித்து எழுந்த முத்தையா கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ராமநாதபுரம் நகர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முதுகுளத்தூர் தாலுகா சாம்பகுளம் அருகே உள்ள பொலிகால் பகுதியை சேர்ந்த வன்னிமுத்து மகன் செல்வம் (37) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.