வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி துணிகள் தீ வைத்து எரிப்பு
விழுப்புரம் அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி துணிகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே சிந்தாமணி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கருவறையில் மட்டும் கதவுகள் உள்ளது. கோவில் பிரகாரத்தில் நந்திகேஸ்வரர், லிங்கேஸ்வரர், துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல சாமிகளின் சன்னதிகள் உள்ள நிலையில் பிரகாரத்திற்கு வெளியே கதவு இல்லாமல் திறந்த நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இரவு யாரோ மர்ம நபர்கள் சிலர் அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள பிரகாரத்தில் இருக்கும் சாமி சிலைகளின் மீது அணிவிக்கப்பட்டிருந்த துணிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் சாமி துணிகள் தீயில் எரிந்தது.அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், சாமி துணிகள் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பதற்றத்துடன் கோவிலுக்குள் வந்தனர். இதை பார்த்ததும் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணை
மேலும் சாமி சிலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்ததை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை கேள்விப்பட்டதும் அந்த கோவில் முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இந்நிலையில் வீடியோ வைரலானதை பார்த்த பா.ஜ.க. நிர்வாகி கோபி, இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் இந்து சமய அறநிலையத்துறையினரும் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நேற்று விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பிரகாஷ் மற்றும் போலீசார், அந்த கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார், யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story