அனைத்து கல்லூரி மாணவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்-சுகாதார துணை இயக்குனர் அறிவுறுத்தல்
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
கீழக்கரை,
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும், பள்ளிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கல்லூரி திறந்தவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் கல்லூரி உதவியாளர் ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். கல்லூரி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
இது குறித்து ராமநாதபுரம் சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:-
பனைக்குளம், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் போன்ற பகுதியில் இருந்து கீழக்கரை தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வரும் பனைக்குளத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், ராமேசுவரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு தீவிர கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது கல்லூரிகள் தொடங்கி இயங்கி வருவதால் அனைத்து மாணவர்களும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
மேலும் கொரோனா வழி நெறிமுறைகளை பின்பற்றி நடக்காத கல்வி நிறுவனங்கள் மீது பொது சுகாதார பராமரிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story