மணம்பூண்டி கிராமத்தில் ரேஷன் கார்டுக்கு ரூ 9 ஆயிரம் தருவதாக பொதுமக்களிடம் வசூல் வேட்டை


மணம்பூண்டி கிராமத்தில் ரேஷன் கார்டுக்கு ரூ 9 ஆயிரம் தருவதாக பொதுமக்களிடம் வசூல் வேட்டை
x
தினத்தந்தி 7 Sept 2021 11:40 PM IST (Updated: 7 Sept 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

மணம்பூண்டி கிராமத்தில் ரேஷன் கார்டுக்கு ரூ 9 ஆயிரம் தருவதாக பொதுமக்களிடம் வசூல் வேட்டை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கைவரிசை


திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ளது மணம்பூண்டி கிராமத்தில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில் டிப்டாப் உடை அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் கிடந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தனியார் வங்கி ஒன்றின் பணம் செலுத்தும் பூர்த்தி செய்யப்படாத படிவங்களை வைத்துக்கொண்டு அவ்வழியாக வருவோர் போவோரிடம் பிரதமரின் நிதியிலிருந்து ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ரூ.9 ஆயிரம் பணம் வந்துள்ளது. 

பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் ரேஷன் கார்டை சம்பந்தப்பட்ட தனியார் வங்கியில் கொடுத்தால் ரூ.9 ஆயிரம் கிடைக்கும் என கூறினர். இதை உண்மை என்று நம்பிய அந்த பகுதி மக்கள் ரேஷன் கார்டுகளுடன் அங்கே திரண்டனர். அவர்களுக்கு மர்ம நபர்கள் தனியார் வங்கியின் பணம் செலுத்துவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதற்காக ஒருநபரிடம் குறைந்த பட்சம் ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.800 வரை கட்டணம் வசூலித்தனர். 

பின்னர் மர்ம நபர்கள் பூர்த்தி செய்து கொடுத்த படிவத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் குறிப்பிட்ட தனியார் வங்கிக்கு சென்று பணத்தை கேட்டனர். அப்போது படிவத்தை வாங்கி பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த படிவத்தை யார் கொடுத்தது? பணம் தருவதற்கு எந்த ஒரு அரசும் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை என தெரிவித்தனர். இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் மர்ம நபர்களை தேடி குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களை காணவில்லை.  பொதுமக்களிடம் இருந்து நூதன முறையில் பணம் பறிப்பதற்காக  ரேஷன் கார்டுக்கு ரூ.9 ஆயிரம் பணம் கிடைக்கும் என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டதை உணர்ந்தனர். இந்த சம்பவம் மணம்பூண்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story