சங்கராபுரத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
சங்கராபுரத்தில் ஏரியில் மீன்பிடிக்க சென்ற போது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகினா்
சங்கராபுரம்
அக்காவுக்கு சாப்பாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்துப்பாதை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ஜெகதீஸ்வரன்(வயது 10). அதே பகுதியை சேர்ந்தவன் வெங்கடேசன் மகன் கார்த்திக்(10).
நண்பர்களான இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் சங்கராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் தனது அக்கா திவ்யாவுக்கு சைக்கிளில் சாப்பாடு எடுத்துச் சென்றான். உடன் கார்த்திக்கையும் அழைத்து சென்றான். பின்னர் திவ்யாவிடம் சாப்பாடை கொடுத்து விட்டு இருவரும் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
சிறுவர்கள் மாயம்
ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை.
பின்னர் இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடி வந்தனர்.
அனாதையாக நின்ற சைக்கிள்
அப்போது சங்கராபுரம் கள்ளிகுட்டை ஏரி அருகே சைக்கிள் ஒன்று அனாதையாக நின்றது. அருகில் சிறுவர்களின் 2 ஜோடி செருப்புகளும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சைக்கிள் ஜெகதீஸ்வரன் ஓட்டி வந்தது என்பதும், அருகில் கிடந்த செருப்புகள் இரு சிறுவர்களுடையது என்பதும் தெரியவந்தது.
இதனால் 2 சிறுவர்களும் ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரவு 9 மணிஅளவில் ஏரிக்கு வந்து 2 சிறுவர்களையும் தேட ஆரம்பித்தனர்.
உடல்கள் மீ்ட்பு
சுமார் 1 மணி நேர தேடலுக்கு பிறகு ஜெகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
பின்னர் சிறுவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் ஏரியில் மீன்பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏரியில் மீன்பிடிக்க சென்றபோது 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story