கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம்
மசினகுடி உள்பட 16 கிராமங்களில் 4 ஆயிரத்து 600 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
கூடலூர்
மசினகுடி உள்பட 16 கிராமங்களில் 4 ஆயிரத்து 600 கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. காப்பகத்தை சுற்றி மசினகுடி, ஸ்ரீமதுரை, முதுமலை, நெலாக்கோட்டை ஊராட்சிகள் உள்ளன. கிராமப்புறங்களில் ஏராளமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேய்ச்சலுக்காக செல்லும் கால்நடைகள் வனப்பகுதியில் சில சமயங்களில் நுழைந்து விடுகிறது.
இதனால் வனவிலங்குகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவலால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படவில்லை. இதனிடையே கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வனத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையினர் இணைந்து முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு இலவச மருத்துவ முகாமை நேற்று தொடங்கினர். முதற்கட்டமாக மசினகுடி ஊராட்சியில் உள்ள 16 கிராமங்களில் வருகிற 10-ந் தேதி வரை இலவச கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது.
4,600 கால்நடைகளுக்கு சிகிச்சை
மாயார், உண்டி மாயார், பூதநத்தம், மசினகுடி, ஆச்சக்கரை ஆகிய கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் தலைமையில் கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் ஏராளமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று (புதன் கிழமை) சிறியூர், ஆனைக்கட்டி, சொக்க நல்லி, மாவனல்லா, செம்மநத்தம், வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
நாளை (வியாழக்கிழமை) குறும்பர்பள்ளம், தொட்டலிங்கி, கோவில்பட்டி தக்கல், ஆச்சக்கரை, மசினகுடி, சிங்காரா ஆகிய இடங்களில் கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குறும்பர்பாடி, மாயார், உண்டி மாயார் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இதுகுறித்து வனச்சரகர் மாரியப்பன் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வருகிற 10-ம் தேதி வரை கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. மொத்தம் 4,600 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. எனவே கிராம மக்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story