தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம்


தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Sep 2021 9:07 PM GMT (Updated: 7 Sep 2021 9:07 PM GMT)

தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2-ம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளில் சிலர் ஆசிரியர் பயிற்சி, கல்வி நிறுவனத்தின் தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் உள்ள குளறுபடியை உடனடியாக தமிழக அரசு களைந்திடக்கோரி தேர்வை புறக்கணித்து, தேர்வு மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்தலும் நிலை ஒன்றிற்கான தேர்வு நடந்தது.
இந்நிலையில் தேர்வு எழுத வந்த 67 பேரில், 2 மாணவர்கள், 42 மாணவிகள் என 44 பேர் தேர்வு எழுதுவதை புறக்கணித்துவிட்டு, தங்களது ஆடையில் கருப்பு பட்டை அணிந்து தேர்வு மையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் எங்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வினை நடத்த வேண்டும். தேர்வுக்கான மதிப்பெண்ணை மதிப்பிடுவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தேர்வு மைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தேர்வை புறக்கணித்தனர்.

Next Story