சேலத்தில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலத்தில் பூக்களின் விலை நேற்று உயர்ந்தது. கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்
பூக்கள் விலை உயர்வு
சேலம் பழைய பஸ்நிலையம் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, குரால்நத்தம், வீராணம், வலசையூர், மன்னார்பாளையம், வாழப்பாடி, ஓமலூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பண்டிகை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை அதிகரித்து இருந்தது. இதன்படி கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கும், சன்னமல்லி ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.400-க்கும், சாதிமல்லி ரூ.240-க்கும், சாமந்தி ரூ.100-க்கும், அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், கோழிக்கொண்டை ரூ.80-க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு
இது குறித்து பூ வியாபாரிகள் கூறும் போது, கடந்த வாரத்தை விட இந்த வாரம் பூக்களின் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பூ மார்க்கெட்டுக்கு மழையின் காரணமாக குண்டுமல்லி, சன்னமல்லி உள்ளிட்ட சில பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story