பாஸ்போர்ட் விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வெளிநாட்டு தம்பதி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு


பாஸ்போர்ட் விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வெளிநாட்டு தம்பதி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Sept 2021 3:04 AM IST (Updated: 8 Sept 2021 3:04 AM IST)
t-max-icont-min-icon

பாஸ்போர்ட் விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வெளிநாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி:
பாஸ்போர்ட், விசா இல்லாமல் கிருஷ்ணகிரியில் தங்கி இருந்த வெளிநாட்டை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
வங்களதேச தம்பதி
கிருஷ்ணகிரி தர்கா கே.ஏ.நகர் வெங்கடாபுரம் ஊராட்சி பகுதியில் வங்காள தேசத்தை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் சட்டத்திற்கு புறம்பாக பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருப்பதாக கிருஷ்ணகிரி கொத்தபேட்டா கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
அதில் வங்காளதேசத்தை சேர்ந்த இக்பால்முல்லா (வயது 34), அவரது மனைவி தஸ்லீமா (25), இக்பால்முல்லாவின் உறவினர் லக்கி (19) ஆகியோர் தங்கி இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இக்பால் முல்லா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மும்பை வந்ததாகவும், அங்கிருந்து சென்னைக்கு மனைவி, உறவினர் மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வந்ததாகவும் கூறினர்.
சிறை தண்டனை 
மேலும் இக்பால் முல்லா தனது நண்பரின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரியில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லாமல் வங்காளதேசத்தில் இருந்து வந்ததற்காக இக்பால் முல்லா, தஸ்லீமா, லக்கி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார். 
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வங்காளதேச தம்பதி உள்பட 3 பேருக்கும், தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் பாஸ்கர் ஆஜர் ஆகி வாதாடினார்.

Next Story