மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம்
தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மந்திரி அஸ்வத் நாராயணின் காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு: தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மந்திரி அஸ்வத் நாராயணின் காரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர் அமைப்பினர் போராட்டம்
கர்நாடகத்தில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தேசிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவை தவிர அனைத்து கட்சியினரும், மாணவர் அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் மங்களூரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மந்திரி அஸ்வத் நாராயணின் காரை, மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர்.
இந்த நிலையில் நேற்று மைசூரு பல்கலைகழக 101-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கவர்னர் தாவர்சந்த் கெலாட், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். கவர்னர், மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். முன்னதாக, மைசூரு பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மந்திரி அஸ்வத் நாராயண் காரில் வந்தார்.
முற்றுகையிட முயற்சி
இந்த சந்தர்ப்பத்தில் மைசூரு பல்கலைகழக வளாகத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அங்கு வந்த மந்திரி அஸ்வத் நாராயணின் காரை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அதற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், மாணவர் அமைப்பினரை தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். அதன்பின் மந்திரி அஸ்வத் நாராயண் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story