மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி


மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 8 Sept 2021 3:06 AM IST (Updated: 8 Sept 2021 3:06 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி பயணத்தின்போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு: டெல்லி பயணத்தின்போது கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

மந்திரிசபை விரிவாக்கம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை 11 மணியளவில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை பசவராஜ் பொம்மை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசும் திட்டம் இல்லை. மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை சந்திப்பேன். அப்போது அவரிடம் பேசுவேன். ஆனால் அவருடன் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை. டெல்லி பயணத்தின்போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து எங்கள் கட்சி மேலிட தலைவர்களுடன் பேச்சு நடத்தும் எண்ணம் இல்லை.

நெடுஞ்சாலை திட்டங்கள்

மத்திய நிதித்துறை மந்திரிகள் நிர்மலா சீதாராமன், மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை இன்று (அதாவது நேற்று) சந்திக்கிறேன். நாளை (இன்று) மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதித்துறை மந்திரி ஹர்தீப்சிங் புரியை சந்திக்க இருக்கிறேன். நிதின் கட்காரியுடன் விவாதிக்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து பேச உள்ளேன்.

நிதித்துறை மந்திரியிடம், மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி பெங்களூரு வந்திருந்தபோது, அவருடன் வீட்டு வசதி, மெட்ரோ ரெயில் திட்ட நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினேன். இதுகுறித்து அவருடன் விரிவாக விவாதிக்க உள்ளேன்.

கண்காணிப்பு பணிகள்

கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளது. அதனால் அந்த வைரஸ் கர்நாடகத்தில் பரவுவதை தடுக்க அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள கர்நாடக எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். மேலும் நிபா வைரசின் இயல்பான தன்மை மற்றும் அவை பரவும் விதம் குறித்த தகவல்களை சேகரிக்கும்படி நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகத்தில் நிபா வைரசை தடுக்க அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story