நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது 6,996 பேர் எழுதுகின்றனர்


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 20 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது 6,996 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 8 Sept 2021 3:46 AM IST (Updated: 8 Sept 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

20 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது

நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீட் தேர்வு வருகிற 12-ந் தேதி 20 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 6,996 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
நீட் தேர்வு
தேசிய தேர்வு முகமை மற்றும் இந்திய அரசாங்கமும் இணைந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வை வருகிற 12-ந் தேதி பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்துகிறது.
இந்தத்தேர்வை நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 996 மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர். இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களிலும், தென்காசி மாவட்டத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 20 மையங்களில் நடக்கிறது.
20 மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பிரான்சிஸ் சேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளி, புஷ்பலதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி பப்ளிக் ஸ்கூல், ஆண்டனி பப்ளிக் ஸ்கூல், புஷ்பலதா வித்யா மந்திர், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிகுலேஷன் பள்ளி, சங்கர்நகர் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பொன்விழா மெட்ரிகுலேஷன் பள்ளி,
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சாப்டர் மேல்நிலைப்பள்ளி, சங்கர்நகர் கேம்பிரிட்ஜ் பள்ளி, வடக்கன்குளம் ராஜாஸ் பொறியியல் கல்லூரி, நெல்லை சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலைக்கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி, வடக்கன்குளம் எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணா பள்ளி‌ ஆகிய 17 மையங்களிலும்,
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே. இன்டர்நேஷனல் பள்ளி, வடக்குபுத்தூர் வேல்ஸ் பப்ளிக் பள்ளி, செங்கோட்டை இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஆகிய 3 மையங்களிலும் ஆக மொத்தம் 20 மையங்களில் நடக்கிறது.
கூடுதல் பஸ்கள்
தேர்வு நடைபெறக்கூடிய நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும் தேர்வு மையங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடவும், மருத்துவ குழு தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு எழுத மாணவர்கள் அதிக அளவில் வர இருப்பதால் கொரோனா தொற்றுநோய் காரணமாக மையங்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு பராமரித்திட மாநகராட்சி ஆணையாளர், பேரூராட்சி உதவி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
தேர்வு எழுதுவோர் தங்கள் தேர்வு மையங்களை முன்கூட்டியே கண்டறிந்து வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தேர்வறைக்கு செல்போன்கள் எடுத்து செல்லக்கூடாது. தேர்வு எழுத வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேர்வு எழுதுகின்ற நபர்களை தவிர வேறு யாரும் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.
இந்த தகவலை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.


Next Story