தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
விரட்டி பிடித்து தடுப்பூசி
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பஸ்நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று நேரில் சென்று கேட்டறிந்தார். அப்போது தடுப்பூசி போடாத வியாபாரிகள், ஊழியர்களுக்கு அங்கேயே மருத்துவக்குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.
கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு வருவதை கண்டதும் தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள், கடை ஊழியர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் விரட்டி சென்று பிடித்து வந்து தடுப்பூசி செலுத்தினர். மேலும் தடுப்பூசி செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
வியாபாரிகள், கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
சுத்தமாக வைக்க வேண்டும்
தொடர்ந்து பஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியே வந்து கொண்டிருந்தது.
இதைக்கண்ட கலெக்டர், பஸ்நிலையத்தில் இதுபோன்று கழிவுநீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்தின் பல்வேறு இடங்கள் சுத்தமாக இல்லை. அனைத்து பகுதிகளையும் தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் பரவாத வகையில் அனைத்து இடங்களையும் சுத்தம் செய்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாளை பஸ்நிலையத்தில் மீண்டும் ஆய்வு செய்வேன். அப்போது அனைத்து இடங்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கால்வாயில் இருந்து வெளியேறிய கழிவுநீரை வாகனம் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபானம்
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் சுமார் 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 6½ லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கல்லூரி மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் அவர்கள் மூலம் குழந்தைகளுக்கு தொற்று பரவுவதை தடுக்க முடியும். தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகர நல அலுவலர் மணிவண்ணன், 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story