ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்


ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Sept 2021 6:46 PM IST (Updated: 8 Sept 2021 6:46 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் ஓடைகால்வாயில் தரைப்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் ஓடைகால்வாயில் தரைப்பாலம் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓடை கால்வாய்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நந்தி மங்கலம் கிராமத்தில் 1,500 பேரும், ராமபுரத்தில் சுமார் 500 பேரும் வசிக்கின்றனர். 

இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நந்திமங்கலம் ஏரி கடைவாசல் பகுதியில் போளிப்பாக்கத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடை கால்வாய், கட்டாரிக்குப்பம் செல்லும் வழியில் புலிவலம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் மற்றொரு கால்வாய், மயானத்திறக்கு செல்லும் ஓடை கால்வாய் உள்ளது.

இந்த ஓடைக்கால்வாய் வழிகாகத்தான் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் மற்றும் விவசாய பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள். 

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த கால்வாய் வழியாகத்தான் கொடைக்கல், கொடைக்கல் மோட்டூர் சென்று வருகின்றனர். மகப்போறு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்ல பிரதான சாலையாகவும் பயன்பட்டு வருகிறது.

 மழைக்காலங்களில் ஏரி நிரம்பி ஓடைக்கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இரண்டு கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் வெள்ளத்தில் இறங்கிதான் செல்கின்றனர்.

 இறந்தவர்களின் உடல்களையும் இந்த வழியாகத்தான் எடுத்து செல்ல வேண்டும். 

தரைப்பாலம் அமைக்க வேண்டும்

பொங்கல் அன்று சோளிங்கர் யோக நரசிம்மர் உற்சவ சாமியை மண்டப சேவைக்காக இந்த கால்வாய் வழியாகத்தான் எடுத்துவரவேண்டும். 

ஆனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இந்த வழியாக செல்லமுடியாமல் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிலும்,  கலெக்டரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓடை கால்வாய்களை ஆய்வு மேற்கொண்டு, அளவீடு பணிகள் நடைபெற்றது. 

இந்தநிலையில் ஆந்திரமாநிலம் சித்தூரில் உள்ள கலவகுண்டா அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோளிங்கர் ஒன்றியத்திறக்கு உட்பட்ட பல்வேறு ஏரிகள் நிரம்பியது. 

நந்தி மங்கலம் ஏரி நிரம்பி ஓடை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தண்ணீர் அதிகமாக சென்றால் புலிவலம் வழியாக கட்டாரிக்குப்பம், கொடைக்கல் என சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஓடைகால்வாயில் தரைப்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story