வானிலை உள்பட 19 வகையான பயன்பாடுகளை உழவன் செயலியில் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்-கலெக்டர் தகவல்
உழவன் செயலியில் விவசாயிகள் 19 வகையான பயன்பாடுகளை எளிதில் அறிந்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவன் செயலி
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உழவன் செயலியை ஆன்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, கைபேசி எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலி மூலம் விவசாயிகள் தங்கள் கிராம பஞ்சாயத்திற்கு, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் வரும் நாட்களை அறிந்து கொள்ள முடியும்
உரங்கள் இருப்பு
உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மற்றும் மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம், சந்தை விலை நிலவரம், வானிலை அறிவுரைகள், பண்ணை வழிகாட்டி, இயற்கை பண்ணை பொருட்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு பொருட்கள், அணை நீர்மட்டம், வேளாண் செய்திகள், கருத்துக்கள், பூச்சி, நோய் கண்காணிப்பு, பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம், உழவன் இ-சந்தை, வேளாண் நிதிநிலை அறிக்கை போன்ற 19 வகையான பயன்பாடுகளை இந்த செயலி மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
எனவே உழவன் செயலியை நாமக்கல், மாவட்ட விவசாயிகள் அனைவரும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து வேளாண்மை சார்ந்த தகவல்களை அறிந்து கொண்டு பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story