அரவக்குறிச்சி-க.பரமத்தி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு


அரவக்குறிச்சி-க.பரமத்தி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
x
தினத்தந்தி 9 Sept 2021 12:19 AM IST (Updated: 9 Sept 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் அருகே அரவக்குறிச்சி-க.பரமத்தி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நொய்யல்,
கூட்டு குடிநீர் திட்டம்
க.பரமத்தி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த குடியிருப்புகள் மற்றும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றில் கடந்த 2002-2003-ம் நிதியாண்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வட்டை கிணறு அமைக்கப்பட்டது. 
குந்தாணி பாளையம் நத்தம்மேட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதில் நீருந்து நிலையம் அமைக்கப்பட்டது. நத்தமேடு வரை ராட்சத குழாய்கள் புதைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குழாயில் உடைப்பு
இந்தநிலையில் மரவாபாளையம் மகாத்மா காந்தி நகர் செல்லும் சாலையில் க.பரமத்தி-அரவக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் அதிகளவு வெளியேறி நீரோடைபோல் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
இதன்பேரில் அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாயை சீரமைப்பதற்கான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பள்ளம் தோண்டி உடைப்பு ஏற்பட்ட இரும்பு குழாயை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Next Story