பழனி, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பழனி, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2021 1:10 AM IST (Updated: 9 Sept 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

பழனி, திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் தனியார்மயமாக்குதலை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மதுரை கோட்ட தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் கிளை பொருளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ரெயில்வே உள்பட பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க கூடாது. மேலும் ஊட்டி மலை ரெயில் உள்பட 4 மலை ரெயில்களை தனியாருக்கு வழங்கும் முடிவை கைவிட வேண்டும். அதேபோல் 10 விரைவு ரெயில்கள் உள்பட 90 ரெயில்களை தனியாருக்கு வழங்க கூடாது. மேலும் கொங்கன் ரெயில்வே, விரைவு சரக்கு ரெயில் பாதை, மும்பை-டெல்லி ரெயில் பாதை ஆகியவற்றை தனியாருக்கு விற்று பணமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதேபோல் பழனி ரெயில்நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க கிளை தலைவர் நாசர்தீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், செயலாளர் தண்டபாணி, மதுரை கோட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், ரெயில்வேயை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். 

Next Story